
Table(toc)
பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரனாக இருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார்.
சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியார். இவர்தான் நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகமும். இவர்தான் வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி. இந்த வெள்ளி என்ற சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு. மகாலட்சுமியின் அவதாரம், யாருக்கெல்லாம் லட்சுமி யோகம் இருக்கிறது என்று ஆய்வு தெரிவித்துள்ளார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன்.
சுக்கிரபகவான்
பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் இந்த சுக்கிரன்.
அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்றும் ஒரு பெயருண்டு. ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் ஆகிறான். இந்த சுக்கிரனின் அதிதேவதை இந்திராணியாவாள். பிரத்யதி தேவதை இந்திரனாவான். எனவே இந்த சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள். எனவே பொன் மட்டுமல்ல வெள்ளி எனும் உலோகமும் மகாலட்சுமிக்குப் பிரியமான பொருளாகிறது. எனவே வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றுவதை மகான்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.
மகாலட்சுமி
வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும். செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். திருமகள் யாகத்தில் தக்ஷ்ணருபியாகவும், தாமரையில் தேஜோ ருபியாகவும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் சுடராகவும் விளங்குகிறாள். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.
செல்வத்திற்கு அதிபதி
திருமகள் என்றும், அலைமகள் என்றும் , மலர்மகள் என்றும் மகாலட்சுமி பக்திபரவசத்தோடு பக்தர்களால் போற்றப்படுகிறாள். லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள். இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார்.
லட்சுமி தேவியின் அருள்
நம் இந்து மதத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, காக்கும் கடவுளாக அருள் புரிகிறார். உலக உயிர்களின் தாயாக மகாலட்சுமியும் அவரோடு இணைந்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும், மகாலட்சுமி அவரோடு உடன் அவதாரம் செய்கிறார். நாராயணன் என்று விஷ்ணு அழைக்கப்படும் போது நாரயணியாக மகாலட்சுமி அவருடன் இணைந்திருக்கிறார். பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள். இல்லாமை என்ற சொல்லலை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.
ஜோதிடத்தில் லட்சுமி யோகம்
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லட்சுமி யோகத்தை தரும். ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
லட்சுமி யோகம் பலன்கள்
இந்த யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.
பில் கேட்ஸ் அவர்களின் ஜாதகத்தில் லக்னம் மிதுனமாகி லக்னாதிபதி கன்னியில் உச்சம் பெற்று ஒன்பதுக்குடைய சனி உச்சம் பெற்று ஐந்துக்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் பலமான லக்ஷமி யோகம் உருவாகியுள்ளதை பாருங்கள். மேலும் தனஸ்தானமான சந்திரன் பத்தாமிடத்தில் நீர் ராசியில் நிற்பதும் மிக சிறப்பான அமைப்பாகும். அதுமட்டுமா! லக்னாதிபதி உச்சம் புதன் உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று பத்ர யோகம் எனும் பஞ்சமகா புருஷ யோகத்தை ஏற்படுத்தியுள்ளதையும் பார்கலாம்.
மேலும் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரனாடு இனைந்து நீசபங்கம் அடைந்ததும் ஆறாம் இடமும் நீர்ராசியுமான விருச்சிகத்தில் ராகு நின்றதும் ஒரு காரணமாகும்.
மேலும் செவ்வாயும் புதனும் இனணந்து புதன் வீட்டில் நிற்பதும் அவருக்கு உலகளவில் பேரும் புகழும் ஏற்பட காரணமா இருந்தது. எனவே லட்சுமி பூஜை செய்யாவிட்டாலும் லட்சுமி யோகம் ஏற்பட்டுவிட்டால் உலக முதல் பணக்காரராக இருப்பதில் ஆச்சரியம் என்ன?
வெள்ளீஸ்வரர் ஆலயம்
சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசையில் உள்ளவர்களையும் குபேரனாக்கும் என்று சொல்வது உண்டு. சுக்கிரனுக்கு அதிபதியான சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில். திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டபோது, மன்னனைத்தடுக்க முயற்சித்த குரு சுக்கிராச்சாரியார் முடியாததால், தானே வண்டாக உருவெடுத்து நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக்கொண்டார். திருமால் புல்லால் வாயைக்குத்த வண்டாக உள்ளே இருந்த சுக்கிராச்சாரியாருக்கு பார்வை பறிபோனது. பின்னர் மூவுலகையும் திருமால் அளந்தார். தன் பார்வை திரும்ப கிடைக்க திருமாலை தொடர்ந்து சுக்கிராச்சாரியார் பிரார்த்தித்து வந்தார்.
பரிகார பூஜைகள்
மாங்காடு தலத்தில் தவமிருக்கும் பார்வதியை பார்க்க ஈசன் அங்கு வருவார், அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறுவாய் என்று திருமால் கூறியுள்ளார். அங்கு சிவலிங்கத்தை தினமும் பூஜித்த சுக்கிராச்சாரியாருக்கு அங்கு வந்த சிவபெருமான் பார்வை திறனை கொடுத்தார். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும் சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாங்காடு வெள்ளீஸ்வரரை தரிசித்து பார்வை திறனை பெறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அருகே தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றும் வழிபடலாம்.

Your comment will be visible after approval.