Gayatri Mantra
காயத்திரி மந்திரம்
காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் காயத்திரி மந்திரம் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.
காயத்திரி மந்திரம் :
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
காயத்திரி மந்திரத்தின் விளக்கம் :
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!
நிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம்.
உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்களில் சிறந்த காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஆத்ம சுத்தி கிடைக்கும்.
கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என கிருஷ்ண பகவான் கூறியுள்ளார்.
தன்னை ஜெபிக்கின்றவர்களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரம் எனப் பெயர் ஏற்பட்டது.
விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாம்...!
ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்த போது
"த்ரயி' என்ற வேதசாரம் கிடைத்தது.
அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்த போது காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது ..!.வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.
விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி காயத்ரி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள்.விஸ்வாமித்திரர் மூலமாகவே காயத்ரி மந்திரம் உலகிற்கு கிடைத்தது
உலக நன்மையைக் கருத்தில் கொண்டு அவர் அதை உலகிற்கு வழங்கினார். விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாலேயே ஸ்ரீராமபிரான் இராவணனை வென்றதாகவும் சொல்லப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் அட்சர சுதியில் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு.
காப்பாற்றும்' எனப் பொருள்படும் அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள்.
நாடு சுபிட்சமடையவும் கொடிய நோய்கள் அகலவும் காயத்ரிமந்திரம் உதவும்.
காயத்ரி தேவி தோற்றம்
சிறப்புமிக்க காயத்ரிதேவிக்கு சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி எனும் ஐந்து முகங்கள் உண்டு.
ஒருமுகம் பவளம்போல் செந்நிறமாகவும்,
இரண்டாம் முகம் பொன்னிறமாகவும்,
நடுமுகம் ஆகாய நீல நிறத்திலும்,
நான்காம் முகம் தூய வெண்ணிறமாகவும்,
ஐந்தாம் முகம் முத்துப்போல் ஒளி வீசுவதாகவும் அமைந்துள்ளன.இந்த ஐந்து முகங்களும் சிவனைப்போல் ஐந்தொழிலையும் செய்கின்றன.
காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும், நண்பகலில் நடுத்தர வயதினளாகவும், மாலையில் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவளாகவும் மூவகைத் தோற்றம் தருகிறாள் என்பர்.
காலையில் சரஸ்வதியான பிரம்ம சொரூபிணியாய்,
நண்பகலில் சாம்பவியான ருத்ர சொரூபிணியாய்,
மாலையில் வைஷ்ணவியான விஷ்ணு சொரூபிணியாக
அருளாட்சி புரிகிறாள்..!
காயத்ரீ தேவி
விஷ்ணுலோகத்தில் மஹாலட்சுமியாகவும்,
பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும்,
கைலாயத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக
காயத்ரி ஸ்தோத்திரம் குறிப்பிடுகிறது.
காயத்ரி மந்திர மகிமை
காயத்ரி வேதங்களின் தாய். உலக பாவங்களைப் போக்குபவள்.
பூமியிலும் சொர்க்கத்திலும் காயத்ரி மந்திரத்தை விடவும் நம் ஆன்மாவை பரிசுத்தம் செய்யும் பொருள் வேறில்லை.
காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் மூன்று முறை ஜபித்தால் மங்களம் உண்டாகும். செய்யும் காரியம் ஜெயமாகும்.
நான்கு வேதங்களை ஓதியதன் பலன் கிடைக்கும்.ஆரோக்கியம், பலம், அழகு, அறிவு, பிரம்மதேஜஸ் போன்றவை உண்டாகும். காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பவர்க்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அஷ்டமா சித்திகளையும் தரும் என்பர் பெரியோர்.
காயத்ரி மந்திரம் சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்டது.
ஒவ்வொரு தெய்வத்தையும் முழுமுதலாகக் கொண்டகாயத்ரி மந்திரங்களும் உண்டு.
விநாயகர் காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி என எல்லா தெய்வங்களின் பேரிலும் காயத்ரி மந்திரம் உண்டு.நவகிரகங்களுக்கும் உண்டு.
காயத்ரிதேவியை காண நாம் செல்ல வேண்டிய திருத்தலங்கள்
சிதம்பரம் அருகேயுள்ள கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலுள்ள காயத்ரி தேவி ஆலயம் இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய மிகவும் அபூர்வமானதாகும்.
ஐந்து முகங்கள், பத்துக் கரங்களுடன் வெண்தாமரையில் வீற்றிருப்பது போன்ற எழிலான தோற்றத்தில் காயத்ரிதேவி காட்சி தருகிறாள்.
பௌர்ணமிதோறும் கோவிலில் ஹோமம், அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம் நடக்கும். பிரார்த்தனை பலித்தவர்கள் அம்மனுக்கு ஆறு கஜம் புடவை சாற்றி அபிஷேகம் செய்கின்றனர்.
சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திலுள்ள காயத்ரி தேவியும் புதுமையான தோற்றம் உடையவள்தான். பஞ்சலோக மூர்த்தியான தேவி ஐந்து முகங்கள், மூன்று கண்கள், பத்துக் கரங்கள், மூன்று தனங்கள், மூன்று கால்களுடன் காட்சி தருகிறாள்.
திருப்பட்டூர் பிரம்மன் ஆலயத்திலும், சென்னையில் அரும்பாக்கம் ஜெய் நகரிலும், இன்னும் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களிலும் காயத்ரிதேவி சந்நிதி அமைந்துள்ளது.
அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.
"காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை, தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை, காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை, ஏகாதசியை மிஞ்சிய வேறு விரதமில்லை" என்கிறது ஒரு சுலோகம்.
ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1,008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு
ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.அதை இனி வரும் ஒவ்வொரு பதிவுகளாக காணலாம்.
***Gayatri Mantra***


Your comment will be visible after approval.