“இட்லிக்கு வலிக்காம கட்டுப்பா” என என் தந்தை அடிக்கடி சொல்வார். பார்சலில் முதலில் இட்லியிலிருந்து வருவோம். இட்லி ஒரு பார்சலுக்கு 2 அதிகபட்சம் 4 இருப்பதே சரியான பார்சல் முறை! 10 இட்லி பார்சல் கேட்டாலும் 4 இட்லிகள் 2 பொட்டலங்களும் ஒரு 2இட்லிகள் பொட்டலமும் தான் தருவார் அப்பா.
நாலு இட்லிக்கு மேல் நிச்சயம் ஒரு பார்சலில் இருக்காது. அதே போல சட்னி வைத்து மேலே இலை வைத்து மூடி இட்லி பார்சல் என்பது கிடையவே கிடையாது. சட்னிகள் தனிப் பார்சலாக, இட்லிகள் தனிப்பார்சலாகத்தான் இருக்கும்.! அன்று சாம்பார் சட்னிக்கு பாத்திரங்கள் கொண்டு வந்துவிடுவார்கள்.
அதனால் சட்னி பார்சல் என்றால் நிச்சயம் அது வீட்டிற்கு இல்லை என அறியலாம்! பார்சல் கட்டும் பேப்பர் கிழித்து வைத்த பின்பு கிழித்த பேப்பரை விட அரை இஞ்ச் சுற்றளவு கூடிய அளவில் தான் வாழையிலையை நறுக்கி அடுக்குவோம். பேப்பரை விட இலை சற்று பெரிதாக இருக்கக் காரணம் பார்சல் மடிக்கும் போது தவறியும்..
நியூஸ் பேப்பர் உணவுப் பொருள் மீது பட்டுவிடக்கூடாது, இலை தான் படவேண்டும். ஐ என்னும் எழுத்து வடிவில் நான்கு இட்லிகளை வைத்து நான்கு புறமும் இட்லியை அழுத்தாமல் மடிக்க வேண்டும். பார்சல் சரியாக சதுரவடிவில் இருக்கும். அதன் பின் கூட்டல் குறி போல நூலை குறுக்கும் நெடுக்கும் சுற்றுவது சிறந்த முறை.
மதுரையில் சன்னமான சணல் கயிறு உபயோகிப்பார்கள். பார்சல் நூலை வைத்தே அது எந்த ஊரில் கட்டப்பட்ட பார்சல் என்பதை அப்பா சொல்லிவிடுவார். அதே போல இலைகளில் வாழை இலை தவிர, தையல் இலை, மந்தாரை இலை, வேங்கை இலை, புரசை இலை, என பல ஊர்களில் பயன்படுத்துவார்கள்.
அந்த இலைகளை வைத்தும் எந்த ஊரில் பார்சல் கட்டியது என்பதை சொல்லிவிடலாம். இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிரம்பிய இலைகள். இதில் கட்டப்பட்ட உணவுகள் அதன் ருசியை இன்னமும் கூட்டுமே தவிர குறைக்காது.பொங்கல், புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், பணியாரம், கலவை சாதங்கள் போன்றவை..
பார்சல் கட்ட வேண்டிய உணவுகள் ஆகும். பார்சலில் வாங்கக் கூடாத உணவுகள் பூரி, தோசை, ரவா தோசை, நெய் ரோஸ்ட், மெல்லிய தோசைகள் அனைத்தும். ஊத்தப்பம் மட்டும் விதி விலக்கு! ரவா தோசை எல்லாம் செம்புலப் பெயல் நீர் போல இரண்டாக மடிந்து ஃபெவிகால் போட்டது போல ஒட்டிக்கொள்ளும்! அதே போல..
பூரியை நடுவில் மசால் வைத்து பார்சல் கட்டுபவனுக்கு கருட புராணத்தில் இருக்கும் எல்லா தண்டனைகளையும் ஒன்றாக வழங்கி விடலாம். ஊதுபத்தி கண்டெயினர் போல தோசையை உருட்டி கட்டித்தருவார்கள். இலைகளுக்குள் அங்கப் பிரதட்சணம் செய்த தோசை உருண்டு பிரண்டு தன் தோசை அடையாளத்தை..
இழந்து ஆதார் கார்டில் தெரியும் நம் முகம் போல மாறிவிடும். அன்றைக்கே ஜவுளிக்கடைகளில் தரும் காக்கி கலர் காகித பேப்பரில் பூரியை போட்டு பார்சலாகத் தருவார் அப்பா! அது மிகுந்த வரவேற்பை பெற்றது. நிறைய வாடிக்கையாளர்களிடம், நெய் ரோஸ்ட், ரவா, இதெல்லாம் பார்சலில் வாங்காதிங்க சார் என்பார்.
அதெல்லாம் கல்லில் இருந்து சூடாக எடுத்ததும் நேராக நாம் சாப்பிடும் தட்டுக்கு வரவேண்டியவை என்பார். சில பேர் முறுகலா ஒரு நெய்ரோஸ்ட் பார்சல் கேட்டு வருவார்கள். ஓங்கி அறையலாம் போலத் தோன்றும்! முறுகலான தோசையை பார்சல் கட்டினால் அப்பளம் போல நொறுங்கிவிடும். பார்சலை பிரித்தால் நொறுங்கி..
பிய்ந்த தோசை பழைய சினிமாக்களில் வில்லனால் ரேப் செய்யப்பட்ட கதாநாயகி போல அலங்கோலமாக காட்சியளிக்கும். இதெல்லாம் அந்த உணவுகளுக்கு நாம் செய்யும் துரோகங்கள் என்பார் அப்பா! வாங்குறவனுக்கு தெரியாது தம்பி நாம தான் இதை எடுத்துச் சொல்லணும் என்பார். சின்ன ஊத்தப்பம் என்றால் கூட தனித் தனியாகத்தான் பார்சல் இருக்கும்.
10 இட்லியை ஒண்ணா கட்டுங்க 4 தோசையை ஒண்ணா கட்டுங்க என்று சிலர் வருவார்கள். அவர்களிடம் தம்பி நாம் சமூகத்தில் ஒண்ணா இருக்கலாம் சாப்பாட்டில் ஒண்ணா கலந்தா நல்லாருக்காதுன்னு சொல்லிவிடுதல் நல்லது. அதே போல கலவை சாதங்களுக்கு தயிர் சாதம் கட்டும் போது 2 பேப்பர் அதன் மேல்..
2 அடுக்கு இலை வைத்து கட்டச் சொல்வார். தயிர் சாதம் சீக்கிரம் ஊறும் என்பதால் பார்சல் கிழியும். புளியோதரை வெஜிடபிள் பிரியாணி போன்ற எண்ணெய் கசியும் சாதங்களுக்கு பேப்பர் 3 போட்டு கட்டுவோம் எண்ணெய் உறிஞ்சும் என்பதால் பார்சல் என்றால் உள்ளே இருக்கும் உணவை அழுத்தாமல் மடித்து கட்டவேண்டும்.
பார்சலின் விளிம்புகளில் வாழை இலை வெளியே தலை காட்ட பேப்பர் அதற்கு கீழ் இருக்க வேண்டும். முக்கியமாக சிகரெட், பீடி குடிப்பவர்களை பார்சலில் போடவே மாட்டார் அப்பா. அதே போல நீளமான அழுக்கு நகங்கள், கைகளில் புண்கள் போன்றவை இருந்தால் அவர் பார்சலில் இருக்க மாட்டார். பார்சல்..
கட்டும் இடத்தில் ஜில்லென ஒரு பாத்திரத்தில் நீர் இருக்கும் சூடான உணவுகளை பார்சல் கட்ட எடுப்பவர்கள் அடிக்கடி கை நனைக்க. அந்த நீரே அரை மணி நேரத்தில் சூடாகிவிடும், அவ்வப்போது அதையும் மாற்றிவிடச் சொல்லுவார். பார்சல் கட்டுபவர்கள் கை ரோஜா இதழ்கள் நிறத்தில் சிவந்து இருக்கும். இப்படி..
சின்னச் சின்ன விஷயங்களையும் மெருகேற்றி உணவுகளின் தன்மைக்கு ஏற்றார் போல இலைகள், காகிதம் தேர்வு செய்து ஒரு சாதாரண பார்சல் தானே என்று அசட்டையாக இல்லாமல் அத்தனையையும் கவனித்து ஒரு ஓவியன் போல ஒரு சிற்பி போல அதை நேர்த்தியான கலையாக வடிவமைத்துச் செய்தவர் அப்பா.!

Your comment will be visible after approval.