“சர்க்கரைப் பொங்கல்”ன்னு சும்மாவாச்சும் சொல்லேன் நம்ம வெங்கடேசன் எங்கிருந்தாலும் ஓடி வந்துடுவான்” என் பாட்டி அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள் இது! வெங்கடேசப் பெருமாளுக்கு மட்டுமல்ல எனக்கும் மிகமிகப் பிடித்தது சர்க்கரைப் பொங்கலே.! ஒரு வேளை எனக்கு வெங்கடேசன் எனப் பெயர் வைத்ததே இதற்கு தானோ என பல முறை எண்ணியதுண்டு.
குழைவாக வேகவைத்த பச்சரியில் வெல்லத்தை தூளாக்கி சேர்த்து மணக்க மணக்க நெய்யூற்றி திராட்சையும் முந்திரிப் பருப்பும் தட்டிப் போட்ட ஏலக்காயும் கலந்த பொங்கலை விரும்பாதவர் யார் இருக்க முடியும்.! அதிலும் சர்க்கரை பொங்கலை கொதிக்க கொதிக்க சாப்பிடுவது பேரானந்தம்! பொங்கலை அள்ளும் விரல் நுனிகள் சுட, அதை ருசிக்கும் நாக்கும் சுட அதை உண்பது.. அடடா..
பூலோக சொர்க்கம்! வெல்லத்தின் நிறத்திற்கு ஏற்ப அடர் தங்க நிறத்திலும், வெளிர்தங்க நிறத்திலும் பொங்கல் காணப்படும்.. பெருமாள் கோவிலில் தரப்படும் பொங்கல் என்பது எப்போதும் ஏ கிரேடு.! திருப்பதியில் பிரசாதமாக தரப்படும் பொங்கலைப் பாத்திரத்தில் பார்த்தாலே கண்ணால் ஸ்கேனிங் செய்வது போல அதனை கண்ணாலேயே விழுங்கி ஆனந்தமடையலாம்.!
அதை அண்டாவில் இருந்து ஒரு கரண்டி அள்ளும் போது அந்தக் குழிவில் சுற்றிலும் திரண்டிருக்கும் நெய்யானது ஒகேனக்கல் அருவி போல பாய்ந்து வந்து அந்த குழிக்குள் நிரம்புமே ஆஹா.! காணக் கண் டிரில்லியன் வேண்டும்! சர்க்கரைப் பொங்கலில் முழு முந்திரிப் பருப்பு போடுபவர்கள் வாழும் போது எவ்வளவு பாவம் செய்தாலும் இறந்த பின்பு அவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் எனலாம்.!
சில கிராமப்புறங்களில் வைக்கும் சர்க்கரைப் பொங்கல் எனக்கு பெரும்பாலும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது! ஒண்ணு களி போல இருக்கும், ஆஸ்தான சர்க்கரைப் பொங்கலின் நிறமான அந்த அடர் தங்க நிறம் இருக்காது. நெய்கலரில் இருக்கும் இல்லாவிட்டால் பெரிய மண்ணாங்கட்டி போல உயிரற்று மல்லாக்க கிடக்கும்.! அந்தப் பொங்கலின் இனிப்பும் அசட்டு இனிப்பாக இருக்கும்.!
அதிலிருக்கும் முந்திரி திராட்சையெல்லாம் தேட அகழ்வாராய்ச்சியாளர்களை அழைத்து வரவேண்டும். கடைசியில் அவர்கள் அதெல்லாம் இதில் போடவே இல்லிங்க என தீசிஸ் அளிப்பார்கள். சர்க்கரைப் பொங்கலுக்கு எப்போதும் உயிர் உண்டு இலையில் போட்டால் மெதுவாக அது பரவணும்! தொன்னையில் தந்தாலும் குறைகுடம் போல ததும்பிக் கூத்தாடணும்.!
இப்படி உயிர்ப்பான சர்க்கரைப் பொங்கலை கட்டிக் கட்டியாக செய்பவர்களுக்கு கருடபுராணத்தில் எழுதியுள்ள மொத்த தண்டனைகளையும் தந்துவிடலாம். சர்க்கரை பொங்கல் பொல பொலன்னு சாதம் போல வடித்து இருக்கக்கூடாது! குழைவாகத்தான் இருக்கணும்! அதில் லேசான பச்சைக் கற்பூரம் சேர்த்தால் இன்னும் திவ்யம்! அடுத்து இதில் போடும் முந்திரி & திராட்சைகள்.
முழு முந்திரி மற்றும் திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து பிறகு சர்க்கரைப் பொங்கல் மீது தூவி சாப்பிடுவது மிகச் சிறந்த வழிமுறையாகும். சூடான பொங்கலை ஸ்பூனில் சாப்பிட்டால் உலோகங்களால் செய்யப்பட்ட ஸ்பூனில் மட்டுமே சாப்பிடணும். மறந்தும் இதை பிளாஸ்டிக் ஸ்பூனில் சாப்பிடவேண்டாம். அந்தப் பொங்கல் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு நிச்சயம் இனிக்காது
சர்க்கரைப் பொங்கலிற்கு அக்கார அடிசில் என்னும் ஒண்ணுவிட்ட தங்கை ஒன்று உள்ளது! அத்தையாக கற்கண்டு சாதம் எனும் அமிழ்தம் உள்ளது! இவையெல்லாம் சிறந்த இனிப்பு உணவுகள் தான் எனினும்.. பொங்கலின் தலைவன் அடர் தங்கநிறக் குழைவில் முந்திரி திராட்சைகள் மினுக்க செய்யும் சர்க்கரை பொங்கலே! சூடான அவனுக்கு ஈடு இணை எந்த பொங்கல் வம்சத்திலும் கிடையாது!

Your comment will be visible after approval.