மாமன்னர் அக்பர் முதன் முறையாக எண்ணெய் கத்திரிக்காயைச் சைவ சமையலில் சாப்பிட்டு அதன் அற்புதச்சுவையில் மயங்கிப் போனார்!அந்த விருந்தில் அவருடன் சேர்ந்து சாப்பிட்ட பீர்பாலிடம் ஆஹா! நான் சாப்பிட்டதிலேயே இது தான் அற்புத ருசியுள்ள காய் என்ன பீர்பால் சரிதானே என்றார்! அடுத்த மைக்ரோ விநாடியில்..
ஆமாம்ஜி! கத்திரிக் காய் போல அற்புத ருசியான காய் வேறு எதுவும் இல்லை என ஆமோதித்தார் பீர்பால்! அடுத்த முறை அசைவ உணவோடும் கத்திரிக்காயை சாப்பிட்டு விட்டு 'பஹூத் அச்சா' இது முன்பை விட பிரமாதம் இல்லியா என்றார், மீண்டும் பீர்பாலிடம்! ஆம் பிதாமகரே! அசைவ உணவில் சேர்க்கும் கத்திரிக்காயும்..
தி பெஸ்ட் தான் என்றார்! மூன்றாவது முறை பிஞ்சுக் கத்திரி போட்ட ஆட்டு இறைச்சிக் குழம்பும் நெய் சோறும் சாப்பிட்டுவிட்டு! 'வாரே வாஹ்' என்னய்யா இந்தக் கத்திரிகாய் எந்த டவுனில் இறக்கி விட்டாலும் செஞ்சுரி அடிக்குது! இனி நம் நாட்டின் அரசக் காய் கத்திரிக்காய் தான்! சரியா என்றார் பீர்பாலிடம்! சளைக்காத..
பீர்பால் ‘மிகமிகப் பொருத்தம் ஹொசூர்! இந்தக் கத்திரியின் வால் பகுதி துவங்கும் இடத்தை பார்த்தால் நாட்டின் செளகிதார் நீங்களும் கிரீடம் சூடி உள்ளீர்கள் இதுவும் க்ரீடம் சூடியுள்ளது ஆகவே இது அரசக்காயாக முழுத்தகுதி படைத்தது என்றார்! அன்று முதல் அரசரின் உணவில் தினமும் கத்திரிக்காய் சேர்க்கவேண்டும்..
என உத்தரவிடப்பட்டது! தினமும் கத்திரிக்காயை ருசித்த அக்பருக்கு சில மாதங்களில் திடீரென தோலில் அலர்ஜி ஏற்பட்டு அரித்தது! கை கால்களெல்லாம் திட்டு திட்டாக சொறி ஏற்பட, அக்பரின் மருத்துவர்கள் அவரை டெஸ்ட் எடுத்து, 'அரசே இது அளவுக்கு அதிகமாக நீங்க கத்திரிக்காயை சேர்த்ததன் பலன்'
என்று உடனடியாக டெஸ்ட் ரிசல்ட்டை அறிவித்தனர்! அக்பருக்கு மகா கோபம் வந்தது! அடச்சே எல்லாம் இந்தக் நேபாள் சைசில் உள்ள குட்டிக் கத்திரிக்காயின் வேலையா? இனி அரண்மனைச் சமையலில் மட்டுமல்ல அரண்மனைக்கு உள்ளேயே கத்திரிக் காய்க்கு தடை என சைனா ஆப்ஸ் போல அதை நாட்டில் தடைசெய்தார்!
பக்கத்தில் இருந்த பீர்பால் ஆம் 'கர்மயோகியே' தேசத்தின் 'இரும்பு மனிதர்' உங்களுக்கே அரிப்பு வியாதியைத் தந்த இந்தக் காய் மிகமிக கேவலமான காய் அதற்கு தாங்கள் போட்ட தடை தான் மிகச்சரி என மெகா முட்டு ஒன்றைக் கொடுக்க, கையரிப்பை விட அதிக எரிச்சலானார் அக்பர்! யோவ் அல்லக்கை பீர்பாலே! அது என்ன?
ஒண்ணு இப்படி ஆட்டு, இல்ல அப்படி ஆட்டு, நான் நல்லா இருக்குன்னு சொன்னா அதுக்கும் தலையாட்டுற! இல்லன்னு சொன்னா அதுக்கும் தலையாட்டுறே, போதாததுக்கு அரசரின் மகுடம் போலவே கத்திரிக் காய்க்கும் மகுடமுன்னு என பில்டப் (எக்ஸாம்பிள்) வேறு! நான் என்ன செஞ்சாலும் இப்படி ஜிங்சாக் அடிக்கிறியே!
ஏன்யா ஏன்?? என்றார், வேறு வழியில்லை அரசே எனக்கு வேலையும் கொடுத்து அதற்கு சம்பளமும் தருவது தாங்கள் தானே! அந்தக் கத்திரிக்காய் அல்லவே! அதனால் தான் நீங்க என்ன செஞ்சாலும் முரட்டு முட்டு கொடுக்கிறேன்' என்றார் பீர்பால்! வாய்விட்டு சிரித்த அக்பர் “சபாஷ் பீர்பால் சபாஷ்! இனி நான் என்ன செய்தாலும்..
நீ இந்தத் துதியை மட்டும் நிறுத்தாதே” எனப் பாராட்டி பீர்பாலுக்கு உடனடியாக 2 தங்க நாணயங்களையும் வழங்கி கவுரவித்தார்!

Your comment will be visible after approval.