புனர்பூ தோஷம் என்றால் என்ன ?
ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது.
* சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது.
* சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது.
* சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது.
* சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது.
* பொதுவாக கடக ராசிக் காரர்களுக்கு புனர்பூ தோஷம் என்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது.
திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்குள் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படுவது, தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே இறந்துவிடுவது போன்ற துர்சம்பவங்கள் ஏற்படும்.
புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்
புனர்பூ ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது.
தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.
திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாட்களிலும், சனி பகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலும் தரிசனம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.
சனிக்கிழமையிலோ அல்லது சனி பகவானின் நட்சத்திர நாட்களில் வரும் பௌர்ணமியில், சத்தியநாராயண விரத பூஜை செய்வதால் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் பிரச்னைகளை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை பெற வழிவகுக்கும்.
உழைப்பாளிகள், உடல் ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியவர்களுக்கு அன்னதானம் செய்துவர புனர்பூ தோஷம் நீங்கும். திருமணத்திற்கு உதவி செய்வது போன்றவற்றை செய்ய புனர்பூ தோஷ பாதிப்புகள் குறையும்.
புனர்பூ தோஷத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, ஒன்பதாவது திங்கட்கிழமை திருச்செந்தூர் முருகன் அல்லது உங்கள் பகுதியிலுள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட்டு வர தோஷம் நீங்கும். ஒன்பது வாரத்திற்குக் குறையாமல் விரதமிருப்பது அவசியம்.

Your comment will be visible after approval.