ருத்ராட்சை என்பது சிவ பக்தர்கள் அணியும் ஒரு ஆன்மீக அடையாளமாகும். இது பொதுவாக உருண்டை வடிவத்தில் மணி போல் இருக்கும். ருத்ராட்சதில் பலவகை உண்டு. ருத்ரன் என்பது சிவ பெருமானைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். ஒரு முகம், இரண்டு முகம் என்று 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதில் 14 முகம் ருத்ராட்சம் வரை மனிதர்கள் அணிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் 5 முக ருத்ராட்சம் மிகவும் புகழ் பெற்றது. ருத்ராட்ச உற்பத்தியில் 50-60% 5 முக ருத்ராட்ச உற்பத்தியே ஆகும். இந்தோனேசியா ருத்ராட்சம் அளவில் மிகவும் சிறியதாக கருதப்படுகிறது.
ஐந்து முக ருத்ராட்சம்
ருத்ராட்சத்தில் குறிப்பாக இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ருத்ராட்சம் சிவ பெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்று நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவ குரு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பது இதன் பொருள் ஆகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.
ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்களுக்கு அதீத பசி உணர்வு கட்டுக்குள் வந்து, அளவாக உட்கொள்ளும் உணர்வை உண்டாக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சிவனின் சக்தி நிறைந்த 5 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் விபத்து, அகால மரணம் போன்றவைகள் ஏற்படாமல் நம்மை காக்கும் ஒரு சிறந்த தெய்வீக காப்பாக இருக்கிறது.
நவ கிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுப கிரகமாக இருக்கிறார். சுப கிரகமாக இருந்தாலும் ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஒரு சில பாதகமான கட்டங்களில் இருந்தால், அந்த ஜாதகர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. குரு பகவானின் நல்லருளை பெறவும், அவரின் கிரகாச்சார காலத்தில் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் இருக்கவும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது.
ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களும், துறவறம் மேற்கொள்ள விரும்புபவர்களும் 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது.
உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் இறைவன் பால் திருப்பும் சக்தி கொண்டது ஐந்து அல்லது பஞ்ச முக ருத்ராட்சம். இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம் காக்கப்படுகிறது.
எங்கு அணிய வேண்டும்?
ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் மிகப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதய தொடர்பான கோளாறுகள், டென்ஷன், பதட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிலர் கைகளில் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார்கள். பிரேஸ்லெட்டில் இணைத்து அணிவார்கள். அதையெல்லாம் விட, கழுத்தில் அணிவது தான் சிறந்த நன்மைகளைத் தரும்.
அணியும் வழிமுறைகள்
இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவதற்கான வழிமுறைகள் உள்ளன. அதனைப் பற்றி காணலாம்.
1. சிவன் கோயிலில் உள்ள பிராமண குருக்களின் மூலமாக ருத்ராட்சத்திற்கு பூஜை செய்து ஆற்றலை செலுத்திக் கொள்ளுங்கள். இந்த பிராண பிரதிஷ்டை பூஜை முடிந்தவுடன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளுங்கள்.
2. பண்டிதரிடம் ஆலோசித்து, நல்ல சுப முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து பிராண பிரதிஷ்டை பூஜையை செய்யுங்கள்.
3. தினமும் உங்களால் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள முடியாவிட்டால், ஒரு சிறிய பெட்டியில் இதனை வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு தினமும் பூஜை செய்து வரலாம்.
4. கனமான நூல் அல்லது கயிறில் கழன்று விடாதபடி, இந்த ருத்ராட்சத்தை அணித்து கொள்ளுங்கள். இந்த ருத்ராட்சம் கீழே நிலத்தில் விழாதபடி ஆழ்ந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். ருத்ராட்சத்தை அணியும் நாள் நல்ல சுப முகூர்த்த நாளாக இருக்க வேண்டும். குறிப்பாக திங்கள், வியாழன் போன்ற நாட்களாக இருப்பது நல்லது.
5. அடிக்கடி ருத்ராட்சத்தை சுத்தம் செய்யுங்கள். இதன் துளைகளில் அழுக்கு அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த பிறகு, புனித நீரால் இதனை கழுவுங்கள். இதனால் ருத்ராட்சத்தின் புனிதம் பாதுகாக்கப்படுகிறது. ருத்ராட்சத்திற்கு எண்ணெய் தடவுவதை எப்போதும் மறக்க வேண்டாம். சுத்தம் செய்தவுடன் இதற்கு எண்ணெய் விட்டு, ஊதுபத்தி கொண்டு பூஜை செய்யவும். நீண்ட நாட்கள் கழுத்தில் அணியாமல் இதனை பெட்டியில் வைத்திருப்பவர்கள் இந்த முறையை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
6. ருத்ராட்சத்தின் அளவு மற்றும் வடிவம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. முகம் சரியாக வரையறுக்கப்பட்டதாகவும், அதன் கோடுகள் தெளிவாக தெரியும்படியாகவும் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளவும். ருத்ராட்சத்தின் மத்தியில் விரிசல் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
7. பொதுவாக ருத்ராட்சத்தை உள்ளங்கையில் வைத்தவுடன், ஆன்மீக நோக்குள்ளவர்களுக்கு ஒரு அதிர்வு உண்டாகும். இத்தகைய அதிர்வை நீங்கள் உணர்ந்தால், இந்த ருத்ராட்சம் உங்களுக்கு ஏற்றது. இறுதியாக, ருத்ராட்சத்தை அணிந்தவுடன், சிவபெருமானை நோக்கி பக்தியோடு அவரின் ஆசிர்வாதம் மற்றும் கிருபை எப்போதும் கிடைக்க மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

Your comment will be visible after approval.