‘விநாயகர் என்றால் ‘மேலான தலைவர்’ என அர்த்தமாகும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும் ‘ஐங்கரன்’ என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தமாகும்.
‘கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன. (alert-success)
உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
![]() |
| Ganesha |
Table(toc)
விநாயகர் அவதாரம் தோன்றிய வரலாறு :
ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.
அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.
பார்வதி தேவியார் காளியாக மாறினாள்
நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.
விநாயகருக்கு யானை தலை வந்தது எப்படி
அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.
கணேசன் பெயர் கரணம்
இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
சிவன் அந்தப் பிள்ளையாரை தனது கணங்களுக்கு தலைவராக நியமித்து ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது ‘நாரதபுராணத்தில்’ தெரிவித்தார். (alert-success)
விநாயகரின் நிலையை பார்த்து பார்வதி வருந்தியதை அடுத்து அவருக்கு விசேஷ சக்திகளை சிவன் கொடுத்தார். பூலோகத்தில் எந்த ஒரு செயல் செய்தாலும் விநாயகரை முதலில் துதித்த பிறகே அது வெற்றி பெரும் என்று வாழ்த்தினார்.
அது முதல் விநாயகர் முதல் கடவுளாக விளங்குவதாக புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது. புது வீடு கட்டினால் கணபதி ஹோமம், தொழில் மற்றும் வியபாரத்தில் கணக்கு தொடங்கினால் பிள்ளையார் சுழி போடுவது என்று அனைத்தில் விநாயகர் முதன்மையவராக இருந்து வருகிறார்.
இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.
கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து மூஞ்சூறுவாக மாற்றிய பிள்ளையார்
'மூஷிக வாகன மோதக ஹஸ்த' என்று விநாயகரை போற்றி பாடுவார்கள். தேவர்களும் கடவுளர்களும் தங்களுக்கு என்று ஒரு வாகனத்தை வைத்திருப்பார்கள்.
முருகன் மயிலையும், சிவன் காளையையும், பெருமாள் கருடனையும், சக்தி சிங்கத்தையும் வாகனமாக வைத்திருக்க விநாயகர் மட்டும் குட்டியான மூஞ்சூறுவை வாகனமாக தேர்வு செய்தது ஏன் என்று பலரும் யோசிக்கலாம்.
புராண கதையில் விநாயகர்
கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும் விநாயகர் புராணம் சொல்கிறது. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுவதால் இன்றைய தினம் வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகருக்கும் அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படையலிட்டு பலரது வீடுகளிலும் வணங்குகின்றனர்.
பிள்ளையாருக்கு மூஞ்சூறு வாகனமானது பற்றியும் புராண கதை
யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே பல ஆண்டுகள் காலம் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, என்ன வரம் என்று கேட்டார்.
அசுரனுக்கு வரம் கொடுத்த சிவன்
எந்த ஆயுதத்தாலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது. வஞ்சக எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது " என்று வரம் கேட்டான், கஜமுகாசுரன். சிவபெருமான் உடனே அவன் கேட்ட வரங்களை அளித்துவிட்டு மறைந்தார்.
அசுரன் கொடுத்த தண்டனை
வரம் பெற்ற அசுரன் சும்மா இருப்பானா? மதங்கமாபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி, அரசனாக ஆட்சி செய்தான். தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் அனைவரும் தன் முன்னால் நின்று, தினமும் மூன்று வேளைகள் ஆயிரத்தெட்டு முறை தோப்புக்கரணம் போட வேண்டுமென்று கட்டளையிட்டான். அவர்கள் வரிசையாக நின்று, தோப்புக்கரணம் போட்டே அயர்ந்து விழுந்தார்கள். அதைப் பார்த்துக் அசுரன் அகங்காரத்துடன் சிரித்தான்.
விநாயகரின் அசுர வதம்
அரக்கனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள், பிள்ளையாரை வணங்கித் தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள். விநாயகரும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கஜமுகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். விநாயகப் பெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகாசுரனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை.
அசுரனை சம்ஹாரம் செய்த விநாயகர்
எந்த ஆயுதத்தாலும் அசுரனை அழிக்க முடியலையே என்று விநாயகர் யோசித்த போது சிவபெருமான் தனது மகனுக்காக குரல் கொடுத்தார். மகனே, கஜமுகாசூரனை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என்று சொல்லவே, சற்றும் யோசிக்காமல் தனது வலது தந்தத்தை ஒடித்து கஜமுகாசூரனை வதம் செய்தார். நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் மூஞ்சூறு போல மாறினான். அந்த மூஞ்சூறுவை தனது ஞானக்கண்ணால் பார்த்தார் பிள்ளையார். ஞானம் பெற்ற மூஞ்சூறு விநாயகரின் பாதங்களின் வீழ்ந்து வணங்கினான். அதனை தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர்.
தீயதை வீழ்த்தும் எலி
பழங்காலங்களில் விவசாயமே அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்தது. அப்போது, எலிகள் விவசாய நிலத்தை நாசம் செய்ததால், அவற்றை வீழ்த்த விநாயகர் அவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும் புராண கதைகள் உள்ளன. இதே போல எலிகள் மிகவும் சிறியதாக இருப்பதாலும், அவற்றால் எந்த சிறு துளையிலும், இருள் சூழ்ந்த இடங்களிலும் நுழைய முடியும் என்பதாலும், விநாயகர் இருளை நீக்கவும், மூலை முடுக்கில் உள்ள தீய சக்திகளை அழிக்கவும் எளிதாக இருக்கும் என்பதற்காகவும் மூஞ்சூறுவை வாகனமாக பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
விநாயகரை முதன்மை கடவுளாக வணங்க புராணங்கள் சொல்லும் காரணங்கள்
விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும்.
முழு முதல் கடவுள் என விநாயகரை போற்றுவது தர்ம சாஸ்திரமாகும். எந்த செயலை தொடங்கும் போதும் விநாயகருக்கு பூஜை செய்வது மற்றும் ஹோமம் செய்வததாக இருந்தாலும் அதிலும் விநாயகர் தான் முதன்மையானவர்.
நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். (alert-success)
கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும்.
விநாயகரை முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது.
ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி.
பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
விநாயகரின் நிலையை பார்த்து அவருக்கு விசேஷ சக்திகளை சிவன் கொடுத்தார். பூலோகத்தில் எந்த ஒரு செயல் செய்தாலும் விநாயகரை முதலில் துதித்த பிறகே அது வெற்றி பெரும் என்று வாழ்த்தினார். அது முதல் விநாயகர் முதல் கடவுளாக விளங்குவதாக புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது. புது வீடு கட்டினால் கணபதி ஹோமம், தொழில் மற்றும் வியபாரத்தில் கணக்கு தொடங்கினால் பிள்ளையார் சுழி போடுவது என்று அனைத்தில் விநாயகர் முதன்மையவராக இருந்து வருகிறார்.
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய 12 முக்கிய ஸ்லோகங்கள்.
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பெற இந்த சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம்.
ஸ்லோகம் 1
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
ஸ்லோகம் 2
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
ஸ்லோகம் 3
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
ஸ்லோகம் 4
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
ஸ்லோகம் 5
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
ஸ்லோகம் 6
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.
ஸ்லோகம் 7
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
ஸ்லோகம் 8
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.
ஸ்லோகம் 9
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
ஸ்லோகம் 10
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
ஸ்லோகம் 11
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
ஸ்லோகம் 12
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
தடைகள் நீங்க. அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம். இதனை தினமும் மாலை தீபம் வைத்த வேலையில் சொல்லி வரலாம். சதுர்த்தி திதி அன்று சொல்வது நல்ல பலன்களைத் தரும் இதனை சொல்லி வந்தால் அனைத்து காரியங்களும் சித்தி ஆகும் என்பது ஐதீகம்.
விநாயகர் சதுர்த்தியன்று இந்த 9 சிறப்புமிக்க விநாயகரையும் மனதார வேண்டிக்கொண்டு நவ செல்வங்களையும் பெறுவோம்.(alert-success)
கவலை தீர்க்கும் கை காட்டி விநாயகர்
திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது திருநாட்டியத்தான்குடி. சுந்தரமூர்த்தி சுவாமிகள், கோட்புலி நாயனாரைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் அங்கு ரத்னகிரீஸ்வரர் எனும் திருநாமத்தோடு சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் சென்றார். ஆனால் அம்மையும் அப்பனும் அப்போது அங்கு இல்லை. இதைக் கண்டு திகைத்த சுந்தரர் அங்கிருந்த விநாயகர் பெருமானிடம், ‘அம்மையும் அப்பனும் எங்கே?’ என்று கேட்டார். உடனே, சிவனும் தேவியும் நாற்றுநட்டுத் திருவிளையாடல் செய்துகொண்டிருக்கும் ஈசான்ய திசையைக் காட்டி அருளினார். உடனே, சுந்தரர் அங்கு சென்று ஈசனைத் தரிசித்தார். சுந்தரப்பெருமானுக்குக் கைகாட்டி அருளியதால் அந்த விநாயகருக்குக் கைகாட்டி விநாயகர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. உழவுத் தொழிலின் மேன்மையை ஈசனே விளக்கிய இந்தத் திருவிளையாடலை சுந்தரருக்கும் நமக்கும் வெளிப்பட வைத்த இந்த விநாயகரை மனதார வணங்கி உணவுப் பஞ்சமில்லாத ஆண்டை வரமாகப் பெறுவோம்.
பாவங்கள் தீர்க்கும் பாலச் சந்திர விநாயகர்
திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது திருவெறும்பூர். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.
அச்சம் தீர்க்கும் அம்பர் மாகாளம் விநாயகர்
சோமாசி நாயனார் செய்த வேள்விக்கு இறைவனை அழைத்துவருவதாக சுந்தரர் வாக்கு செய்தார். வேள்வி அன்று ஈசன், அரைக்கால் சட்டை அணிந்து, தோளில் இறந்துபோன கன்றுக்குட்டியின் உடலைப் போட்டுக் கொண்டு, தோலால் செய்த கள் குடுவையைச் சுமந்தபடி, நான்கு வேதங்களையும் நாய்களாக மாற்றிக்கொண்டு கழுத்தில் தொங்கிய பறையை இசைத்தவாறு வந்தார். அவரோடு பார்வதிதேவி, கையில் கள் பானையை ஏந்திவர உடன் கணபதியும் முருகனும் சிறுவர்களாக உருக் கொண்டு ஆடிப் பாடியவாறே வந்தனர். யாக சாலையில் இருந்தவர்கள் அஞ்சி ஓட, சிறுவனாக இருந்த கணபதி மட்டும், ‘அஞ்ச வேண்டாம், வந்திருப்பது நாங்களே’ என்று சொல்லித் திருவுரு காட்டி அருளினார். எனவே இந்த விநாயகரை வணங்கினால் மனபயம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதிகம்.
வாழ்வை இனிமையாக்கும் கரும்பாயிரம் விநாயகர்
கும்பகோணத்தில் இருக்கும் வராக தீர்த்தக் கரையில் கோயில்கொண்டு அருள்பவர் கரும்பாயிரம் விநாயகர். ஒரு மகாமக தினத்தில் கரும்பு விற்பனை செய்த வியாபாரியோடு விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இந்தப் பெயருக்குக் காரணம். விநாயகப் பெருமான் சிறுவனாக மாறி கரும்பு வியாபாரி ஒருவனிடம் ஒரு கரும்பு கேட்டார். அவனோ தரமறுக்க விநாயகப் பெருமான் வந்திருப்பது யார் என்று உணர்த்த ஆயிரம் கரும்புகளையும் சக்கையாக்கி மறைந்தார். வியாபாரி தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு விநாயகப் பெருமானை வழிபட்டார். உடனே ஆயிரம் கரும்புகளும் முன்னைவிட சத்துள்ள கரும்புகளாக மாறின. இதனால் இந்த விநாயகருக்குக் கரும்பாயிரம் விநாயகர் என்று பெயர் வந்தது. வாழ்வில் விரக்தியும் தோல்வியும் சந்தித்து வருபவர்கள் கரும்பாயிரம் விநாயகரை மனதார நினைத்து வழிபட தோல்விகள் நீங்கி வெற்றிகளும் இனிய மன நலனும் வாய்க்கப் பெறும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருத்தணிஆபத் சகாய விநாயகர்
ஆபத்தில் உதவுபவரே ஆபத் சகாயர். திருத்தணிகையில் அருளும் விநாயகருக்கு ஆபத் சகாய விநாயகர் என்று பொருள். இந்த விநாயகர், முருகப் பெருமானுக்கே ஆபத்தில் உதவியவர். வள்ளியைக் கைப்பிடிக்க, காதல் கைகூட அருளியவர். திருத்தணிகை மலை மேல் உள்ள முருகன் கோயிலில் 2-வது பிராகாரத்தின் வட கிழக்கில் இந்த ஆபத்சகாய விநாயகர் அருள்பாலிக்கிறார். அடியார்களுக்கு எந்த இடையூறு ஏற்பட்டாலும், உடனே அவர்களைக் காத்து உதவிபுரிய அவர் தயாராக இருப்பவர். அவரை மனதில் நினைத்துக் கூப்பிட்டால், முருகனுக்கு உதவியதுபோல் ஓடிவந்து காப்பார் என்பது நம்பிக்கை.
பாரதி போற்றிய மணற்குள விநாயகர்
தேவர்கள் வழிபட்ட ஆலயங்களைப் போலவே சித்த புருஷர்களால் உருவாக்கப் பட்ட கோயில்களும் சிறப்புடையவை. தொள்ளைக்காசு சுவாமிகள் என்னும் மகான் மணற்குளக் கரையில் அமர்ந்திருந்தபோது விநாயகப்பெருமான் மணற்குளத்தில் இருப்பதாக அசரீரி கேட்டது. உடனே சுவாமிகள் குளத்தில் இறங்கி விநாயகர் திருமேனியை வெளிக்கொணர்ந்து ஆலயம் அமைத்தார். இந்த விநாயகருக்கு வெள்ளைக்காரப் பிள்ளையார் என்றும் பெயர். விநாயகப் பெருமான் சிலையைக் கடலில் போடுமாறு சொன்ன வெள்ளைக்காரரின் கண் பார்வை பறிபோகத் தன் தவற்றை உணர்ந்து மீண்டும் கோயிலில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து கோயிலைப் பெரிதுபடுத்திக் கட்டினார். இந்த விநாயகப்பெருமானை மகாகவி பாரதி பாடி வணங்கியிருக்கிறார். நாமும் மனதார பிள்ளையாரை வணங்க, சகல நன்மைகளும் கைகூடும்.
திருப்புறம்பியம் பிரயளம் காத்த பிள்ளையார்
கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங் கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு இந்த விநாயகரைச் செய்து வழிபட்டனர். பிரளயத்திலிருந்து ஊரைக் காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர். விநாயக சதுர்த்தியன்று இவருக்குக் குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சிக்கொண்டு விடுகிறார் என்பதால், இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்பார்கள். இந்த விநாயகரை வணங்கினால் துன்பங்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.
ஔவைப் போற்றிய திருக்கோவிலூர் விநாயகர்
ஒளவையால் பூஜிக்கப்பட்டு, அவருக்கு விஸ்வரூபம் காட்டி, நாமெல்லாம் விநாயகர் அகவல் பெறக் காரணமாக இருந்தார் திருக்கோவிலூரில் அருள்புரியும் விநாயகப்பெருமான். விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும் உள்ளது இந்தத் தலம். இங்குள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் முகப்பு வாயிலில் வலப் புறம் காட்சியளிப்பவர் புகழ்பெற்ற பெரியானைக் கணபதியார். இங்கு, ஒளவையார் கயிலை செல்லும் சிற்பக் காட்சியும் உள்ளது. இந்த விநாயகரை அகவல் பாடிப் போற்றினால் கல்வியில் மேன்மையும் முக்தியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருக்கடவூர் கள்ள விநாயகர்
திருக்கடவூரில் அருளும் விநாயகருக்கு கள்ள விநாயகர் என்று பெயர். பாற்கடலைக் கடைந்தபோது விநாயகரை வழிபட மறந்தனர் தேவர்கள். அதனால் அவர்கள் பல இடர்களை அடைந்தனர். கடைசியில் அவர்கள் அமிர்தம் கிடைத்தும் அதை அருந்த முடியாமல் திண்டாட, விநாயகரை வழிபட்டு வழிபெறுமாறு சிவபெருமான் வழிபாட்டினார். அதன்படி தேவர்கள் திருக்கடவூரில் கணபதியை வழிபட்டு அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானை வணங்கினால் அமிர்தம் அருந்தாமலேயே நீடித்த ஆயுளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே, நல் ஆரோக்கியம் அருளும்படி திருக்கடவூர் கள்ள விநாயகரை வணங்கி மகிழ்வோம்.


Your comment will be visible after approval.