
புரட்டாசியில் குழந்தை பிறப்பு
புரட்டாசியில் பிறக்கும் குழந்தை புரட்டி எடுப்பார்கள் என்று பெற்றோர்கள் பயப்படுவார்கள். இது தவறானது. புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். சித்திரையில் கத்திரி வெயில் காலம் குழந்தை பிறப்பை தவிர்ப்பது போல மழை மாதமான புரட்டாசியில் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தாக்கும் என்பதால்தான் இந்த மாதத்தில் குழந்தை பிறப்பதை பலரும் விரும்புவதில்லை. புத ஆதிபத்யம் நிறைந்த இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும்.
அறிவாளி பிள்ளைகள்
விரதங்கள், பண்டிகைகள் நிறைந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆன்மீக குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். கற்பூர புத்திக்கொண்டவர்கள் இடம் பொருள் நேரம் பார்த்து பேசுவார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். வித்தை அறிவு கணிதம் ஆகியவற்றிற்கு உரிய புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய விசயங்களை எளிதில் கற்றுக்கொள்வார்கள்.
நேர்மையான குணம்
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது அதே நேரத்தில் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். பிறர் மனது புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள் அதே நேரத்தில் சுயகவுரவம் ரொம்ப பார்ப்பார்கள். ஒருதடவை வாக்கு கொடுத்து விட்டால் எப்பாடு பட்டாவது காப்பாற்றுவார்கள். உற்றார் உறவினர்கள், சுற்றார்களுடன் அனுசரித்து அவர்களுடன் இணைந்து வாழ்வார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள்.
தலைமைபதவி தேடி வரும்
புரட்டாசியில் பிறந்தவர்கள் எதையும் தெளிவாக பேசி தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். நேர்மையானவர்கள். நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்து வராது. இவர்களின் குணத்தால் எளிதில் பகையை சம்பாதிப்பார்கள் மனக்கசப்பும் ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சூரியன், சனி பலமாக இருந்தால் ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் தலைமை பதவிகளில் இருப்பார்கள். படிப்பறிவோடு பட்டறிவும் கை கொடுக்கும். தலைமை பதவிகள் தேடிவரும்.
சொத்து சுகம் தேடி வரும்
பூர்வீக சொத்துக்கள் எளிதில் கிடைக்கும். தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவி வழியில் சொத்துக்கள் சேரும். சூரியன் சாதகமாக இருந்தால் அப்பா வழியில் சொத்துக்கள் சேரும், சந்திரன் சாதகமாக இருந்தால் அம்மாவழி சொத்துக்கள் சேரும். புத்திசாலித்தனம் மிக்கவர்கள் என்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவார்கள். அவ்வளவு சீக்கிரம் கடனாளியாக மாட்டார்கள். வேறு வழியின்றி கடன் வாங்க நேரிட்டாலும் அதை எப்பாடு பட்டாவது அடைத்துவிடுவீர்கள்.
தொழில் வருமானம்
புத்திசாலித்தனம் கொண்ட இவர்கள் மூளையை உபயோகித்து ஜெயிப்பார்கள். கலைத்துறையில் சாதிப்பார்கள். கற்பனை சக்தி கொண்டவர்கள். சிறந்த எழுத்தாளர்கள், சினிமா துறையில் ஜெயிப்பார்கள். பத்திரிகைதுறையில் கால் பதித்து வெற்றி பெறுவார்கள். நகை, ஜவுளித்துறையில் கொடிகட்டிப்பறப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பதால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். இவரால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். அதே நேரத்தில் புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் நரம்பு பிரச்சினை தாக்கும். அதிகம் டென்சன் பேர்வலி இதனால் தலைவலி அதிகமாகும். சிலருக்கு பார்வை கோளாறுகளும் ஏற்படும். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் வயிறு கோளாறும் ஜீரண கோளாறும் ஏற்படும். நேர்முக எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிப்பீர்கள். நீங்களும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவரா? உங்க குணாதிசயம் இதோடு ஒத்துப்போகுதா? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே.

Your comment will be visible after approval.